வாழ்க்கை

Tuesday, February 13, 2007


நான் யார்? நான் யார்? நீ யார்?


நம்முடய ஜீவித குறிக்கோள் என்ன? முன்னர் சொன்னதுபோல் நம் கவனத்தை உள்நோக்கி செலுத்தி "நான் யார்" என்ற விசாரத்தைக் கையாண்டால் நமக்கு என்ன விடை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். நான் உடலா அல்லது மனமா அல்லது புத்தியா அல்லது அஹம் என்ற உணர்வா என்று கண்டுபிடிக்க வேண்டும். அது எப்ப்டி? இது நம் புத்திபூர்வமாக அறிய வேண்டிய விஷயம். இதுவரை ஓர் விசாரமாகவே இதைக் கையாளவேண்டும். பார்ப்போமா?
நான் உடலா? நாம் பேசும்பொழுது உடலைத் தொட்டு நான் என்றல்லவா சொல்கிறோம்? அப்போது உடல்தானே "நான்" என்ற வினா எழலாம். "எனக்குப் பசிக்கிறது", "என்னுடல் நலம் கெட்டுவிட்டது", "என்னால் நடக்க இயலாது" என்றெல்லாம் சொல்லும் பொழுது நாம் உடலைப் பற்றித்தானே சொல்கிறோம்? ஆம். ஆனால் பாருங்கள் என், எனக்கு, என்னுடைய, என்னால் என்றெல்லாம் சொல்லும்பொழுது அதில் உடமை நினைப்பு இருக்கிறதல்லவா? அதாவது நான் வேறு, எனது உடல் வேறு என்று ஆகிறதல்லவா? அதாவது உடல் எனது உடமையாகும். அதேபோல், "நான் நினைக்கிறேன்", "எனக்குக் கவலையாக இருக்கிறது", "என் மனம் ஓர் நிலையில் இல்லை" என்றெல்லாம் கூறும் பொழுது, அங்கேயும் நான் வேறு என் மனம் வேறு என்றாகிவிட்டதல்லவா? இங்கேயும் மனம் எனது உடமை என்று ஆகிவிடுகிறது அல்லவா? இதுபோல் புத்தி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்வோம். "எனது அறிவில்", "என் கருத்தில்", "எனது நினைவில்" என்றெல்லாம் உரைக்கும் பொழுதும், நான் வேறு எனது கருத்து, அல்லது எனது அறிவு வேறு எனக் கோள்கிறோம் அல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது? "நான்" என்பது நம் உடல் அல்ல, மனமல்ல, புத்தியும் அல்ல எனவாகும் இல்லையா?

அப்படியானால் இந்த "நான் யார்"? எப்படி அறிவது? நாம் பேசும் பொழுது "நான்", "எனது", "என்னால்" என்று சொல்லாமல் எதையாவது குறிப்பிட முடியுமா? ஆதலால் இந்த நான் எனப்படுவது ஓர் நினைவு தானா? ஆம், அது நம் விசாரங்களின் அடிப்படையாகும். இந்த "நான்" என்பதை ஒரு மூல விசாரமாகக் கொண்டு நாம் உரையாடுகிறோம். அதனால் இந்த "நான்" நம் விசாரங்களினெழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ள மூலவிசாரமாக உள்ளது எனத் தெள்ளெனத் தெரிகிறது இல்ல்யா? இந்த முதல் விசாரத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால், அதாவது வேறொன்றும் நினைக்காமல் "நான்" என்ற மூல விசாரத்தை மட்டுமே பின்பற்றிச் சென்றால், அது பின்வாங்கிவிடும். கொஞ்ச நேரத்தில் அதன் மூலத்திலே போய் அடங்கிவிடும். அதன் மூலம் (இருப்பிடம்) ஏது? அதைத்தான் நாம் "மனம்" எனக் குறிப்பிடுகிறோம். இது சாதனை மூலமாகத்தான் உணர முடியும். விசார வடிவில் புரிந்துகொள்ள முடியாது. இது எப்படி முடியும்? ஒரு உதாரணாத்தைக் கொண்டு பாற்ப்போம்.

ஒரு மழலைச் சிறுவன் தன் களிக்கோப்பைகளை வைத்து விளயாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சேஷ்டைகளை நாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவன் கோப்பைகளை மேலும் கீழும் உருட்டியும் புரட்டியும் பார்க்கிறான். சிலவற்றை உடைக்கிறான். இன்னும் சிலவற்றை சிதைக்கிறான். மற்றும் சிலவற்றைத் தூர எறிகிறான். நாம் கோபம் கொள்ளாமலும் அவனிடம் போகாமலும் இருந்த இடத்திலிருந்தே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுவனின் கவனம் தானாக நம்மிடம் திரும்புகிறது. நாம் ஒன்றும் சொல்லாமலும் முகமாற்றம் இல்லாமலும் இருப்பதைப் பாற்த்து சிரிக்கிறான். அப்போதும் நாம் பேசாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோம். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல நம்மை நோக்கி நகர்ந்து வருகிறான். முடிவில் நம்மைத் தொட்டுப் பார்க்கிறான். நாம் அசையாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோமே தவிர, பேசவில்லை. அவனை அதட்டவில்லை. அப்பா நம்மைப் பார்க்கிறார், ஆனால் நம்மை ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்து நம்மிடம் வந்து நம் மடியில் ஏறி அமர்கிறான். நம் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கிறான். நாம் அசையவில்லை. முடிவில் தானாகத் தோய்ந்து படுத்து உறங்கிவிடுகிறான். நாம் ஒன்றும் சொல்லாமலே அவன் சேஷ்டைகள் நின்று விடுகின்றன, அவன் உறங்கிவிடுகிறான் இல்லையா?

இப்போது நம் மூலவிசரத்தை அந்தச் சிறுவனாகக் கொள்வோம். நாம் பிரிந்து நின்று இந்த "நான்" என்ற மூலவிசாரத்துடன் வேறு விசாரங்கள் எழாமல் அல்லது கலக்கமல் அதன் போக்கை கவனிப்போம். அந்த சிறுவனைப்போல் இந்த "நான்" அதன் இருப்பிடத்திற்குச் சென்று அடங்கிவிடும். நம் கவனம் மட்டும் அதை நோக்கியே இருக்க வேண்டும். அது தானாக ஓய்ந்து அடங்கிவிடும். இதைத்தான் "ஆத்ம விசாரம்" அல்லது "Meditation" என்று சொல்கிறோம். இது வெகு எளிதில் கைவரக்கூடிய சாதனை அல்ல. தொடர்ந்து பல நாள் கையாள வேண்டிய ஒரு மகத்தான சாதனையாகும். இப்படி "நான்" என்ற உணர்வு அடங்கிவிட்டால் அதாவது மூல விசாரமே இல்லையெனில் அங்கு மனம் இல்லை. காரணம் மனம் என்ற ஒன்று தனித்து இல்லை. தொடர்ச்சியாக வந்துபோகும் பலவாறான விசாரங்களின் சேர்க்கையே "மனம்" எனப்படும். முதல் விசாரமான் "நான்" அடங்கிவிட்டால் மற்ற விசாரங்களுக்கு ஆதாரமில்லாமல் போய்விடும். ஆகையால் யாதொரு விசாரமும் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுது மனம் என்ற ஒன்றுக்கு இடமேது? அப்பொழுது அங்கு என்ன உள்ளது? எல்லாமாக ஒன்றாக உள்ளது. அதென்ன எல்லாமாக உன்றாக உள்ளது? அங்கு ஒன்றும் இல்லையே என வினவலாம்.

Monday, February 12, 2007

உணவளவேயாகும் குணம்


"ஸாத்வீக உணவு", "ராஜஸீக உண்வு", "தாமஸீக உண்வு" எனக் குறிப்பிட்டதை இங்கு விரிவு படுத்த விரும்புகிறேன்:

ஸாத்வீக உணவு:

நல்ல நினைவுகள், நல்ல விசாரங்கள் இவைகளைத் தூண்டிவிட உதவியாக உள்ள உணவு வகைகள் பால், பழ வகைகள், அரிசி, கோதுமை, ஊக்க சத்துடைய காய்கறிகள், தென்னை இளநீர், வாயுவை அதிகரிக்காத தான்ய வகைகள், தேன், நெய், தயிர் முதலியவை. உப்பு காரம் மிதமாக சேர்க்க வேண்டும், அதாவது உணவு உட்கொள்ளத் தேவையான அளவு. நம் ஆசைகளை, முக்கியமாகக் காம விசாரத்தைத் தூண்டிவிடக்கூடிய உணவு வகைகள் சேர்க்கக் கூடாது. இது நம் மனதை நல்வழிக்குப் போக உதவாது. நாம் எப்பொழுதும் சாந்தமாகவும், ஸுமுகமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவையான, உயிர் வாழ்வதற்குத் தேவையான, உணவு வகைகள், அதுவும் தேவையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நம் நலல எண்ணங்களைத் தூண்டிவிடக் கூடிய உணவாக உட்கொள்ள வேண்டும். அவை நம்மை நல்ல வழியில் செல்ல உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ராஜஸீக உண்வு:

அதி காரம், உப்பு, வெங்காயம், உள்ளிப்பூண்டு, அசைவ உணவு, அதிகமாகப் பருப்பு வகைகள், மைதா, எண்ணெயில் பண்ணக் கூடிய பலஹாரங்கள், பூமிக்கடியிலிருந்து வரும் கிழங்கு வகைகள், பிராந்தி (சாராயம் வகைகள்), இவை நம் காம விகாரத்தைத் தூண்டிவிடும், வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளப்பும். இரத்தக் கொதிப்பு வர ஹேதுவாகும். சினத்தைத் தூண்டிவிடும். நம் மனதை ஒரு நிலையில் நிறுத்த உதவாது. காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யாதி துர்குணங்களைத் தூண்டிவிடுபவை இவைகள். தேக, மானஸீக, ஹிருதய சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளரும். நற்புத்தி நலியும். சண்டை சச்சரவுகளில் மனம் செல்லும், நிம்மதி கெடும்.

தாமஸீக உணவு:

உப்பு, காரம் இல்லாமல் சாப்பிடுவது, வேகாத காய்கனியைத் தினபது, சாராயம் வகைகள் அருந்துவது, ஊக்க சத்துடைய உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, அமிதமாக உணவு உட்கொள்ளுவது இவை நம் தாமஸ குணத்தைத் தூண்டிவிடும். எப்பொழுதும் சோர்வாக இருப்பது, ஸதா உறங்குவது, சுய சக்தியை இழப்பது போன்ற நிலை ஏற்படும். நம்மை சோம்பலலாக இருக்கச் செய்யும்.

Thursday, February 08, 2007

நம்முடய ஜீவித குறிக்கோள் என்ன?


எல்லோரும் உலகில் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கிறோம். இது கூடத் தெரியாதா என்ன? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாழ்வு என்பது என்ன? நம் ஐம்புலன்கள் உலகிலிருந்து வரும் விஷயங்களை உட்கொண்டு அதற்கேற்ப இயங்குகின்றன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் தன்மயைப் பொறுத்து நம் இயக்கம் உள்ளது. ஸாத்வீக உணவுப் பொருட்களை உட்கொள்வோமானால் நம் இயக்கம் ஸாத்வீகமாக இருக்கும். ராஜஸீக உணவு உட்கொண்டால் நம் இயக்கமும் ராஜஸீகமாக இருக்கும். தாமஸீக உணவு மந்த புத்தியுடன் நம்மை இயங்க வைக்கும். காரணம் நம்முள் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பொழுது நாம் ஒவ்வொரு விதமாக இயங்குகிறோம். எதனால்? இம்மூன்று குணங்களின் சேர்க்கை வீதத்தைப் பொறுத்திருக்கிறது நம் இயக்கத்தின் தன்மை.

இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா? அல்ல. பின் நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி வந்தோம்? எதற்காக வந்தோம் என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்கிறதா? அம்மாவின் உதரத்திலிருந்து வந்தோம். உதரத்தில் கருவாக வந்து வளர்ந்து முழு வளர்ச்சியான பிறகு கர்ப்பப் பை வழியாக வெளி வந்தோம். உயிர் வாழ்வாதற்காக வந்தோம். இதுதானே உண்மை? தவறு. கரு எங்கிருந்து உருவானது? எதற்காக உருவானது? எனபன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். உடல் மூலமாக உலகில் இயங்குகிறோம். உயிர் உள்ளதால் வாழ்கின்றோம். உயிர் நிலைத்து நிற்க உணவு உட்கொள்கிறோம். ஆனால் உயிர் என்பது என்ன? எங்கிருக்கிறது? எங்கிருந்து வந்தது? விடை காண இயலாத ஒரு வினா.

உள்நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால் விடை கிடைக்கும். நம்மை நம்முள் இருந்து இயக்குவது யார்? நான் யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். நான் உடலா? அல்லது மனமா? அல்லது புத்தியா? அல்ல. அஹம் என்ற நினைவா? அல்ல. பின் நான் என்பதின் பொருள் என்ன? இப்படி பகவான் ரமண மஹாரிஷி தந்துள்ள ஆத்ம விசாரத்தைக் கையாண்டால் விடை கிடைக்கும். ஆனால் இதை ஒரு வினாவாகக் கையாளக் கூடாது. ஒரு சாதனையாகக் கொள்ள வேண்டும். எப்படி?